Thursday, April 13, 2017

கவிதை எழுதி கடக்கிறேன்



கொத்து கொத்தாய் பூத்திருந்த
மஞ்சள் நிறப் பூக்களோடும்
நீண்டு வளர்ந்த
கறுப்பு நிற காய்களோடும்
கொஞ்சி மகிழ்ந்து
அசைந்து கொண்டிருந்த
மரம்
இன்று காலை
யாவற்றையும் இழந்து
தன் காலடியில்
சிதறி விழுந்த இதழ்களையும்
முறிந்து கிடக்கும் காய்களையும்
பதறிப் போய் அசையாமல்
நிழலற்று பார்த்துக்கொண்டிருக்க


மகிழ்ச்சி கொள் மரமே
உனது பூக்களெல்லாம்
கடவுள் திருவடி அடைந்தது
என்று சொல்லி தேற்றவோ

சித்திரைக்கனிக்கு
இந்தப் பூ வேண்டும் என்று
பக்தனிடம் ஆணையிட்ட
கடவுளிடம் வாதிடவோ

முடியாமல்
கவிதை எழுதி கடக்கிறேன்
இருவரது மொழிகளும்
தெரியாததால்

No comments:

Post a Comment