Tuesday, March 1, 2016

கொலுசு யார் ?




கொலுசு உங்களுக்கெல்லாம் ஒரு மின்னிதழாக இருக்கலாம். ஆனால் நானோ கொலுசை பெண் குழந்தைகளே  இல்லாத என் வீட்டில் பிறந்த ஒரு அதிஷ்டக்  குழந்தையாகவே பார்க்கிறேன். இதுவரை உங்கள் அனைவரின் கைத்தட்டலில் அவள் எழுந்து ஏழு அடி நடந்து விட்டாள். இன்று வரை அவளை நான் ஆச்சரியத்தோடும், சந்தோஷத்தோடும், பெருமையோடும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  

இதுவரை அப்பாவின் கைப்பிடித்து நடக்க ஆரம்பித்த அவளுக்கு இன்று பொம்மைகளோடு விளையாட ஆசை வந்து விட்டது. வாங்கித் தாருங்கள் அப்பா என என்னிடம் அடம் பிடிக்கிறாள். அவளது உலகில் பொம்மைகள் என்பது புத்தகங்களே.
எனவே அவளின் ஆசையை நிறைவேற்ற அப்பாவாகிய நான் அவளுக்கென ஒரு குட்டி நூலகம் அமைக்கலாம் என முடிவு செய்து இடம் தேர்வு செய்து இருக்கிறேன். அதற்கு கொலுசு நூலகம் என்று பெயர் வைக்கிறேன் என அவளிடம் சொல்லி  இருக்கிறேன். 

இந்தப் பகுதியில் உள்ள அனைவரும் வந்து அவளோடு விளையாடுவதற்காக, இந்த நூலகத்தில் அவளுக்கு பிடித்தமான கதை, கவிதை, சிறுவர் நூல்கள் என என்னால் முடிந்தவரை இட்டு நிரப்பலாம் என திட்டமிட்டுள்ளேன். இது அவளுக்கு பெருத்த சந்தோசத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. 

இந்த முயற்சி என்னைப் போன்ற சாதாரணமானவனுக்கு இது கொஞ்சம் அகலக் கால் வைப்பது போன்று தான். இருந்தாலும் ஒரு நல்ல தகப்பனுக்கு மகளின் மகிழ்ச்சியை விட மேலானது வேறெதுவும் உண்டோ ?


(மகிழ்ச்சி தொடரும்)

No comments:

Post a Comment