“இன்று கொலுசு நூலகம்
சம்பந்தமாய் நான் மதிக்கும் பெரியவர் ஒருவரை சந்திக்கச் செல்லலாமா ? “ என திரு நாச்சிமுத்து ஐயா அவர்கள்
என்னிடம் கேட்க,
“ஐயா, தாங்களே மதிக்கும்
பெரியவர் எனில் மிகவும் பெரியவர் தான்
அவர்” என்று நான் சொல்லி சம்மதிக்கும் போதே மனதுள் நிறைய ஆர்வமும்,
கொஞ்சம் பதட்டமும் எழுந்தது.
ஒரு மாலை நேரத்தில் நாங்கள் பொள்ளாச்சியிலிருந்து
இரு சக்கரவாகனத்தில் சுமார் ஏழு கிலோமீட்டர் பயணம் செய்து அப் பெரியவர் வீட்டை அடைந்தோம்.
புத்தகங்களை மிகவும் நேசிக்கக் கூடிய மனிதர் என்பதற்கு அவரது அறையே சான்றாய் இருந்தது. மெல்லிய தேகம், நல்ல உயரம், வெண் தாடி, முகத்தில் அமைதி, பேச்சில் ஒரு தெளிவு, செயல்களில் என் கண்களுக்கு ஒரு இளைஞராகவே தெரிந்த அந்த பெரியவரின் பெயர்
திரு V.S. சண்முக வடிவேல்
Retd. B.D.O.
சுருக்கமாய் கொலுசு நூலகம் பற்றி அவரிடம் விவரித்தேன். கொலுசு நூலகத்தின் நோக்கம் “வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதே”
என நான் சொன்னதை விட திரு நாச்சிமுத்து ஐயா அவர்கள் “புத்தகங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு
செல்லுமோர் முயற்சி” என்று சொன்னவிதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
மேலுள்ள மூன்று புத்தகங்களை பெரியவர் கொடுத்ததோடு
மட்டுமின்றி, இன்னும் வீட்டிலுள்ள நிறைய புத்தகங்களை சேகரித்து தருகிறேன் என்றார். கூடவே எனக்கு தெரிந்த
பதிப்பகங்களிடமும் பேசி என்னால் முடிந்த உதவிகளையும் கொலுசு நூலத்திற்கு செய்கிறேன்
என்றார். அதோடு நூலகத்திற்கு வாரப் பத்திரிகைக்கு ஆண்டுச் சந்தா ஒன்றும் தன்னால்
தர இயலும் என்று கூறியதோடு திருப்தியடையாதவராய் மேலும் நூல்கள் தற்போதைக்கு வாங்கவென ரூ
1000( ரூபாய் ஆயிரம் ) கொடுத்த போது நாங்கள் மிகவும் நெகிழ்ந்து
போனோம்.
நூலகம் அமைக்கும் தங்களின் சிறந்த முயற்சிக்கு
வாழ்த்துகள் என்று கூறி, அதை சிறப்பாக நடத்துவதற்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான
வழிமுறைகளைக் கூறி எங்களை வாசல் வரை வந்து அன்போடு வழி அனுப்பி வைத்தார்.
அங்கிருந்து வீடு திரும்புகிற போது இன்று நல்ல
உள்ளமும், உயர்ந்த எண்ணமும் கொண்ட சிறந்ததோர் மனிதரைக் கண்டோம் என்று மகிழும் அதே வேளை, திரு நாச்சிமுத்து ஐயா அவர்களின்
“புத்தகங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுமோர் முயற்சி” என்ற
வாக்கியம் மீண்டும் மீண்டும் மனதிலெழுந்து தோள்களில் கூடுதல் பொறுப்புகளை ஏற்றியதையும்
உணர்ந்தேன்.



No comments:
Post a Comment